கியூபா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோல்குன் மாகாணத்தில் இருந்து, அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள குவாண்டமோ மாகாணத்துக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 5 ராணுவ வீரர்கள் இருந்தனர். இவர்கள் குவாண்டமோ மாகாண எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு சென்றனர்.இந்தநிலையில் ஹோல்குன் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் அதன் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.இதில் ஹோல்குன் மாகாணத்துக்கு அருகிலுள்ள ஒரு மலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது கண்டு பிடிக்கப்பட்டது.மேலும் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் மலையடிவாரத்தில் கிடப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.அதன்படி விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுக்கள் சென்றபோது, ஹெலிகாப்டர் மலையில் மோதி தரையில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 5 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மீட்புக்குழுவினர் அவர்களது உடலை மீட்டனர்.விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விரிவாக விசாரணை நடத்துவதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கியூபா ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.