பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது . இதையடுத்து, வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.