வரலாறு காணாத வகையில் நிலவிவரும் பனிப்புயலால் அமெரிக்க மக்களை நிலை குலைய செய்துள்ளது. வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் அங்கு வீசி வரும் பனிப்புயல் அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டி வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பப்பலோ நகரத்தில் வீடுகளை பனி சூழ்ந்து உள்ளது. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இதனால் நெடுஞ்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. பனி காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடுமையான குளிர் வாட்டி வதைப்பதாலும் பனி புயல் வீசி வருவதாலும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இருளில் மூழ்கி கிடக்கிறது. பொதுமக்கள் தாங்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அவசர உதவிக்கு கூட ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை உள்ளது. பனிப்புயலில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பனியால் உறைந்து கிடக்கும் கார்கள் மற்றும் ரோடுகளில் பலர் உயிர் இழந்து பிணமாக கிடக்கின்றனர். பனிபுயலுக்கு இறந்தவர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்து உள்ளது. ஒக்ல ஹோமா, கென்டக்கி, மிசோரி, நியூயார்க், கொலரோடா உள்ளிட்ட மாகாணங்களில்தான் உயிர் இழப்புகள் அதிகமாக உள்ளது. அமெரிக்காவை உலுக்கி வரும் பனிப்புயலால் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் களை இழந்து காணப்பட்டது.