ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன்.
பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியதாக கூறினார்.நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. சிறைவாழ்க்கையின்போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய அம்மாவின் தியாகம் மற்றும் சட்டப் போராட்டம் மற்றும் என் குடும்பத்தினரின் தியாகத்திற்கு கிடைத்த வெற்றிதான் இந்த தீர்ப்பு. என் அம்மா ஆரம்ப காலங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்தார்கள். இந்த வேதனைகளை கடந்து 31 ஆண்டு இடைவிடாமல் போராடினார்கள்.
என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது.எனது விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் உதவியிருக்கிறார்கள். எனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், நேரம் கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.