உலகளவில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்…. கொண்டாடும் ரசிகர்கள்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1986-ல் வெளிவந்த ‘விக்ரம் திரைப்படம் பூமியில் இருந்து வான்வெளிக்கு பறக்க இருந்த ராக்கெட்டை கடத்துவது போன்ற கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது. தற்போது 2022-ல் வெளியாகியுள்ள புதிய ‘விக்ரம்’ திரைப்படம் போதை பொருள் கடத்தலையும், போலீஸ் துரத்தலையும் பற்றிய கதையம்சம் கொண்டதாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக இன்னொரு முகம் காட்டியிருக்கிறார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள். ஜெயராமின் மகன் காளிதாசன், கமல்ஹாசனின் மகனாக வருகிறார். சந்தானபாரதி, செம்பன் வினோத் ஜோஸ் (மலையாள நடிகர்) ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் சூர்யா வந்தாலும் தன் முத்திரையை அழுத்தமாக பதித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். விக்ரம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வார இறுதியில் உலகளவில் ரூ.150 கோடி வசூலை வெற்றிகரமாகத் தாண்டியுள்ளது. வர்த்தக வட்டாரங்களின்படி, இப்படம் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் ஆனால், படத்தின் ஹிந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவில் இல்லை எனவும் வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *