இந்தியாவில் அமைச்சர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார். காரில் இருந்து இறங்கிய அவரை சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், மந்திரியின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தன. இந்த சம்பவத்தில் கார் அருகே அவர் சுருண்டு விழுந்தார். பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் – இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மந்திரி நபா தாசை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜஹர்சுஹுடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது நிலைமை கவலைக்கிடமானது. இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் நபா தாஸ் புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார். புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள சப் – இன்ஸ்பெக்டரை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *