இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இந்தியா, 266 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரகானே 58 ரன்கள் எடுத்தார். புஜாரா 53 ரன்களும், ஹனுமா விகாரி 40 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது. கேப்டன எல்கர் 46 ரன்களுடனும், துசன் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றி இலக்கை எட்டுவதற்கு 122 ரன்கள் தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய எல்கர், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் துசன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எல்கர்- டெம்பா பவுமா இருவரும் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் எல்கர் 96 ரன்களுடனும், டெம்பா பவுமா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்டநாயகனாக டீன் எல்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.