கிறிஸ்துமஸ் தினமான நேற்று இலங்கையில் கனமழை- மக்கள் பரிதவிப்பு

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டன. கண்டி ரெயில் நிலையம், அக்குரணை நகரம் உள்பட பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. கடைகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததுடன், சில வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கண்டி மாவட்டத்தின் அலவாத்துகொடாவில் உள்ள ஒரு வீட்டின் மீது பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியாகினர். மூவர் காயமடைந்தனர். வெள்ளம் காரணமாக கண்டி-மாத்தளை சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது. எனவே மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன. மத்திய இலங்கையின் சில பகுதிகளில் பாறைகள் உருண்டு விழுந்ததாலும், நிலச்சரிவு ஏற்பட்டதாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரெயில்வே துறை தெரிவித்தது. 4 மாவட்டங்களில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர் கனமழையால் பல அணைக்கட்டுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஆறுகளுக்கு அருகில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வங்கக் கடலின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, இலங்கை வழியாக நகர்ந்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசும். அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இலங்கை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *