இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. சாதாரண ஏழை-எளிய மக்கள் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.பொருளாதார சீரழிவில் இருந்து நாட்டை மீட்க வேண்டுமானால் மகிந்த ராஜபக்சே தலைமையில் அமைச்சரவை பதவி விலக வேண்டும். அதற்கு பதில் புதிய இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.கடந்த ஒரு மாதமாக நடந்துவரும் போராட்டம் நேற்று தீவிரமானது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். கொழும்பில் அதிபர் மாளிகை அருகே மக்கள் குடில்கள் அமைத்து போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.
கொழும்பில் அதிபர் மாளிகை அருகே மட்டுமின்றி பிரதமரின் இல்லம் அருகேயும் போராட்டக்காரர்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். ஆனால் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதனால் நேற்று போராட்டக்காரர்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடாரங்களை அடித்து நொறுக்கி போராட்டக்காரர்களை கம்பால் தாக்கினார்கள். இதையடுத்து ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.பிரதமர் வீடு அருகே தொடங்கிய வன்முறை அடுத்த சில மணி நேரத்துக்குள் கொழும்பு முழுவதும் பரவியது. ஆங்காங்கே வன்முறை வெடித்தது. ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது மக்களுக்கு கடும் கோபம் உருவானது. இதனால் அவர்கள் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர்.
அரசு அலுவலகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் தலைநகர் கொழும்பு தீப்பற்றி எரிந்ததுபோல மாறியது. பல இடங்களில் வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது.நாடு முழுவதும் வன்முறை பரவியதால் ராஜபக்சே சகோதரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பொருளாதார சீரழிவுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்தார். இதற்கான கடிதத்தை அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார்.மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவை தொடர்ந்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த நிர்வாக அதிகாரமும் அதிபர் கோத்தபய ராஜபக்சே வசம் சென்றுள்ளது. அவர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் கொழும்பில் உருவான வன்முறை சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் பரவியது. ராஜபக்சே ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்று இரண்டு பிரிவாக பிரிந்து மோதிக் கொண்டனர். ராஜபக்சே ஆதரவாளர்கள் பல இடங்களில் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டனர்.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் ஆளும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளை குறி பார்த்து தாக்குதலை நடத்தினார்கள். குறிப்பாக முக்கிய தலைவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஆளும் கட்சி தலைவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.ராஜபக்சே சகோதரர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 35 தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பலரது வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. ஆளும் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே போராட்டக்காரர்கள் கையில் சிக்கிய பொலநருவா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றவர்கள் ஆங்காங்கே பதுங்கி உள்ளனர்.விடிய விடிய நடந்த தாக்குதல்களில் இருதரப்பினருக்கும் கடும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலையிலும் கொழும்பு உள்பட பல்வேறு பகுதிகளில் வன்முறை நிகழ்ந்தது. இதனால் இலங்கையில் பதட்டம் நீடிக்கிறது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை ஒரு எம்.பி., ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். 220-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. என்றாலும் ராஜபக்சே குடும்பத்தினரை விரட்ட வேண்டும் என்று போராட்டக்காரர்களில் ஒருசாரார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இலங்கை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.