குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழ் மக்கள் மீது கடந்த 65 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்துகின்றன.தமது உரிமைகளுக்கு எதிராக சாத்வீக வழியில் போராட்டம் மேற்கொண்ட தமிழ் மக்கள் மீது படையினரை ஏவி தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தன. இதுவே பின்னர் ஆயுத போராட்டத்துக்கு தமிழ் மக்களை தள்ளியது.அதேபோல, உணவு, எரிபொருள், மருந்துப்பொருட்கள் ஆகியவற்றுக்கான தமது உரிமைகளை வலியுறுத்தி அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் அப்பாவி மக்களின் மீது குண்டர்களை ஏவியும் படையினரின் உதவியுடனும் அரசாங்கம் இன்று மேற்கொண்ட வன்முறை மேலும் வன்முறையை தூண்டும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது.

ஆகவே, இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் இந்த சம்பவங்களில் இருந்து தூர விலகி நின்று மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கம் இன்றைய சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்.தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நிகழ்த்தி பல்வேறு ஆதாரங்களின் மத்தியிலும் தாம் எந்த ஒரு படுகொலையிலும் ஈடுபடவில்லை என்று அரசாங்கம் இன்று வரை எவ்வாறு வாதாடுகின்றதோ, அதேபோல, இன்றைய சம்பவத்துக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று (பல்வேறு காணொலி ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும்) வாதாடும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவசர காலச் சட்டம், ஊரடங்குச் சட்டம் போன்றவற்றை திடீரென்று கொண்டு வந்தது.

இவ்வாறு மக்களை அடித்துத் துன்புறுத்தி ராணுவ அரசாங்கம் ஒன்றை கொண்டு வரவோ என்ற சந்தேகம் எழுகின்றது.தமிழ் மக்களை எவ்வாறு பயங்கரவாதிகள் என்று சித்தரித்து அவர்கள் மீது வன்முறையை ஏவி விட்டார்களோ அதே போல் இனி சிங்கள மக்களுக்கும் எதிராக பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று ஏதேனும் ஒரு சொல்லைப் பாவித்து வன்முறை அரசாங்கம் ஒன்றை நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சந்தேகப்படுகின்றேன்.ஆகவே தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லையேல் இவை யாவும் தமிழ்ப் பயங்கரவாதிகளின் சூழ்ச்சி என்று அரசாங்கம் தமிழர்கள் மேல் அல்லது முஸ்லீம்களின் மேல் பாரத்தைப் போட்டு விடுவார்கள்.இவ்வாறு விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *