உக்ரைன் வான்பகுதியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் விடுத்த கோரிக்கைக்கு ரஷியா கடும் கண்டனம்

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 10வது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் வீரர்களும் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர். இந்த போரில் இரு தரப்பிலும் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக இரண்டு நகரங்களில் மட்டும் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் வான் பகுதியை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலமாக மூன்றாம் தரப்பு நாடுகள் அறிவித்தால், அந்த நாடுகள் ஆயுத மோதலில் பங்கேற்பதாக ரஷியா கருதும் என அதிபர் புதின் எச்சரித்துள்ளார். ரஷிய ராணுவத்தின் பெண் பைலட்டுகளை புதின் சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்துள்ளார்.‘வான் பகுதி தடையை நோக்கிய நகர்வை, நமது படையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தலையீடாகவே ரஷியா கருதும். அந்த நொடியே, நாங்கள் அவர்களை ராணுவ மோதலின் பங்கேற்பவர்களாக கருதுவோம். அவர்கள் எந்த உறுப்பினர்களாக இருந்தாலும் கவலையில்லை’ என புதின் கூறி உள்ளார்.உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தாக்குலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், தங்கள் வான்பகுதியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை என நேட்டோ அறிவித்தால் பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எவ்வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக் கூடாது. இது ரஷிய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும். தடையை மீறும் எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம்.

ஆனால், உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டது. உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தால், அணு ஆயுத நாடான ரஷியாவுடன் ஐரோப்பாவில் பரவலான போரைத் தூண்டும் என்று நேட்டோ விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *