அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – ஈரான்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது.ஈரானின் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்தபடியாக உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்த காசிம் சுலைமானி கொலைக்கு பழி தீர்ப்பதாக ஈரான் சூளுரைத்தது. அதன்படி, காசிம் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்க புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மேலும் வலுத்தது.இந்நிலையில், காசிம் சுலைமானியை படுகொலை செய்ததற்காக அமெரிக்காவிற்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபைக்கு ஈரான் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. சபைக்கு ஈரான் அதிபரின் அலுவலக சட்டத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில், அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிக்காமல் இருக்கவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுதல் உட்பட அனைத்து சட்ட முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு பல ஆண்டுகளாக, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது.சுலைமானி கொல்லப்பட்டதன் 2ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், ஈரான் இந்த கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *