தமிழகத்தின் திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரெயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் உள்ள 117 வீடுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வீடுகளை இடிக்க கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று காலையிலும் அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி அ.தி.மு.க. கவுன்சிலரான கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவொற்றியூருக்கு இன்று நேரில் சென்றார்.அண்ணாமலை நகர் பகுதிக்கு சென்ற அவர், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் திடீரென மயங்கி கீழே சாய்ந்தார். கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் அவர் மயக்கம் போட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானை சுற்றி நின்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், சீமான் மயங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சீமான். அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். முழு உடல் பரிசோதனைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.சீமான் தற்போது நலமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது. வெயிலில் நின்றுகொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமையாலும், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளது.