இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு மோசமானதால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அவை கடும் விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில் இந்தியா, அந்த நாட்டுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. சமீபத்தில்கூட 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) கடனுதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியையும் இலங்கை அரசு நாடி உள்ளது.இந்த நிலையில் இலங்கையில் நாடு முழுவதும் தினந்தோறும் 10 மணி நேர மின்வெட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினமும் 7 மணி நேரம் மின்வெட்டு அமலாகி இருந்தது. இப்போது அது மேலும் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பது மக்களை மேலும் அவதிக்கு ஆளாக்கி உள்ளது.அங்கு அனல்மின் உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்காததால் அதன் உற்பத்தியில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பொதுபயன்பாடுகள் ஆணையத்தின் தலைவர் ஜனக ரத்நாயக்கா தெரிவித்தார்.இதற்கிடையே இலங்கையில் டீசல் வரத்து இல்லாததால் நேற்றும், இன்றும் டீசல் வாங்க யாரும் பெட்ரோல் நிலையங்களில் வந்து காத்திருக்க வேண்டாம் என்று சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சி.பி.சி. கேட்டுக்கொணடுள்ளது.எரிசக்தி துறை மந்திரி காமினி லோகுகே, இந்திய எண்ணெய் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான எல்ஐஓசியிடம் 6 ஆயிரம் டன் டீசலை அவசர கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.