சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு கடந்த 21-ம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கியது. அதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உள்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் ஏற்பட்ட தீ அப்பகுதியில் பரவியது.
தகவலறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், மீட்புக் குழுவினரும் போராடி தீயை அணைத்தனர். அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமான பாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்புக்குழு ஈடுபட்டது. இதற்கிடையே, விமான விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. விமானத்திற்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், விமான விபத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளனர் என சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த 120 பேரின் டி.என்.ஏ. அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.