ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது. எல்லையில் ரஷியா ஒரு 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது.இவ்விவகாரத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸ் மாகாணத்தில் ஒரு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இப்பகுதியில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது.இங்கு சில நாட்களாக அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. மேலும் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் ரஷிய படையினர் உள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.டொனெட்ஸ்க்கில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து ரஷியா தாக்குதல்களை நடத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் முக்கிய நகரான லுஹான்ஸ்க்கில் உள்ள சர்வதேச எண்ணை குழாய் மீது வெடிகுண்டு வீசி தாக்கப்பட்டதில் அது வெடித்து சிதறியதாக ரஷியா அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ரஷியாவில் இருந்து கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பியா பகுதிகளுக்கு செல்லும் எண்ணை குழாய்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் நகரில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்று தாக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவது ரஷியா – உக்ரைன் இடையே போர் பதற்றத்தை தீவிரம் அடைய செய்திருக்கிறது.