என்னுடைய வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும்-ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப்கனி விளக்கம்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த நாடும் தங்கள் வசமானதாக அறிவித்தனர்.இதற்கிடையில் தலீபான்கள் காபூலுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் அப்போதைய அதிபர் அஷ்ரப்கனி தனது மனைவியுடன் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினார். அவர் விமானத்தில் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. நாட்டு மக்களை கைவிட்டுவிட்டு உயிருக்கு பயந்து தப்பி ஓடியதாக அஷ்ரப்கனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது ஏன் என்பது குறித்து அஷ்ரப் கனி தற்போது விளக்கமளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வசித்து வரும் அவர் பிரபல தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இதனை கூறினார்.இதுபற்றி அவர் கூறுகையில் “ஆகஸ்டு 15 அன்று தான் விழித்தபோது, ஆப்கானிஸ்தானில் அதுதான் தன்னுடைய கடைசி நாளாக இருக்குமென்ற எந்தக் குறிப்பும் எனக்கு இல்லை. தலீபான்கள் நெருங்கிவிட்டதால் காபூலில் இருந்து வெளியேற பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர். நாங்கள் எங்கு செல்வோம் என்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட்டபோதுதான், நாங்கள் ஆப்கானை விட்டு வெளியேறுகிறோம் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே இது உண்மையில் திடீரென நடந்ததுதான்” என கூறினார்.மேலும் பணத்தை எடுத்து சென்றதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்த அவர் நான் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். நான் நாட்டிலிருந்து எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும். பணத்தை வைத்து நான் என்ன செய்வேன்?  என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *