இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 327 ரன்களும், தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து 130 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, நான்காம் நாளான இன்று 174 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர் மார்க் ராம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் டீன் எல்கர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
ஆனால், மறுமுனையில் கீகன் பீட்டர்சன் (17), துசன் (11), கேசவ் மகராஜ் (8) ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 4ம்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்துள்ளது. டீன் எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற மேலும் 211 ரன்கள் தேவை. நாளை ஒருநாள் ஆட்டம் மீதமுள்ளது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாத நிலையில், இந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா எட்டுவது மிகவும் கடினமாகும்.