பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரரின் மகனும் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வந்த அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46.
வாழ்க்கை வரலாறு
சென்னையில் பிறந்த புனித் ராஜ்குமார் பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா ராஜ்குமாருக்கு ஐந்தாவது குழந்தையாவார். இவரது உண்மையான சிறுவயது பெயர் லோஹித். புனித் ஆறு வயதாக இருக்கும் போது, அவரது குடும்பம் மைசூருக்கு குடிபெயர்ந்தது. பத்து வயது வரை அவரது தந்தை, புனித் மற்றும் அவரது சகோதரி பூர்ணிமாவையும் திரைப்பட தொகுப்புகளுக்கு அழைத்து வருவார். இவரது மூத்த சகோதரர் தான் பிரபல நடிகர் சிவ ராஜ்குமார்.
புனித் ராஜ்குமார் 1999 ஆம் ஆண்டு அஸ்வினியை மணந்தார். இவர்களுக்கு வந்திதா மற்றும் த்ரிதி என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.புனித் ராஜ்குமார் அவரது தந்தையின் திரைப்பட செட்டுகளுக்கு அடிக்கடி சென்றதால், அவர் நடிப்பை நன்கு கற்றுக் கொண்டார். 16 படங்களுக்கு மேல் பணியாற்றிய புனித் தொழில்துறையின் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராகவும் இருந்தார்.
1976 ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமதா கனிகே’ என்னும் திரைப்படத்தில் அவரது தந்தை ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஆனது.
ஷெர்லி எல் அரோராவின் ‘என்ன அப்புறம் ராமன்?’ நாவலை அடிப்படையாகக் கொண்டு என்.லட்சுமிநாராயண் இயக்கிய ‘பேட்டடா ஹூவு’ திரைப்படத்திற்காக புனித் ராஜ்குமார் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதைப் பெற்றார். அப்படத்தில் அப்பாவி ராமுவாக புனித் நடித்திருந்தார்.
புனித் ராஜ்குமார் வெறும் நடிகர் மட்டுமல்ல. இவர் பழம்பெரும் நடிகர் டாக்டர் ராஜ்குமாரைப் போலவே ஒரு நல்ல பாடகர். இவர் ஆறு வயதாக இருக்கும் போதே, பிரபல இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா இசையமைத்த 1982ம் ஆண்டு வெளியான பாக்யவந்தா திரைப்படத்தில் இடம்பெற்ற “பானா தாரியல்லி சூர்யா” என்ற தனது முதல் பாடலைப் பதிவு செய்தார்.
புனித் ராஜ்குமார் 1982-83 இல் வெளியான ‘சாலிசுவ மொதகலு’ திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக தனது முதல் கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.கன்னட திரையுலகில் அப்பு மற்றும் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இதில் அப்பு என்ற பெயரானது ‘அப்பு’ திரைப்படத்திற்கு பிறகு அவரது ரசிகர்களால் அவருக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் புனித் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அரசு, மிலானா, வம்சி, ஜாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். கடைசியாக இவரது நடிப்பில் யுவரத்னா என்ற திரைப்படம் வெளியானது. திரைப்படங்களுக்காக பல விருதுகளையும் இவர் குவித்துள்ளார்.
இவர் நடிகர் மட்டுமில்லாமல், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர் என்று பன்முகத் திறமைக்கொண்டு விளங்கி இருக்கிறார். இவ்வளவு சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் இடம் பெற்ற புனித் ராஜ்குமார் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும், இவரது நினைவுகள் என்றும் மக்கள் மனதில் அழியாது நிலைத்திருக்கும். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.