ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா எல்லையில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படையெடுக்கும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
மேலும் உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் பேரழிவை சந்திக்கும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.இந்த சூழ்நிலையில் எல்லையில் ரஷ்யா தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் உக்ரைன் ராணுவமும் போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.இதன் காரணமாக எல்லையில் போர் பதற்றம் நீடித்தபடியே இருக்கிறது. மேலும் அமெரிக்கா கிழக்கு ஐரோப்பியாவுக்கு கூடுதல் படைகளை அனுப்பியதால் ரஷ்யா கடும் ஆத்திரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவை கண்டித்து உக்ரைனில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா தொடர்ந்து முயற்சித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கீவ்வில் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்த நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.அங்கு திரண்ட மக்கள் ரஷ்யாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். ‘ரஷ்யா ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்ற பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது தேசிய கீதத்தை பாடியபடியும் உக்ரைன் நாட்டு தேசிய கொடியை அசைத்தபடியும் சென்றனர். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகிய நட்பு நாடுகளின் கொடிகளையும் ஏந்தி சென்றனர்.இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறும்போது, ‘கார்கீவ் ஒரு உக்ரேனிய நகரம் அதை நாங்கள் சரணடைய விடமாட்டோம் என்பதை நிரூபிக்க மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்’ என்றனர்.