ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.மாலி நாடு 2012-ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐ.நா., பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய வீரர்கள் மாலியில் முகாமிட்டிருந்த போதிலும் கிளர்ச்சிகள், இனங்களுக்கு இடையேயான வன்முறைகளால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.இந்நிலையில், அந்நாட்டின் மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பேருந்து சென்று கொண்டிருந்தது. அதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். சாங்கோ ஹெரி என்ற பகுதியில் சென்றபோது அந்த பேருந்தை இடைமறித்த பயங்கரவாதிகள் பஸ்சின் டிரைவரை கொலை செய்து, பேருந்தின் கதவுகளை மூடி தீ வைத்தனர்.இந்த கோர தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 33 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு படை விசாரணை நடத்தி வருகிறது.