மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம்- ரஷியா

உக்ரைன் நாட்டை கடும் சேதத்துக்குள்ளாக்கி இருக்கும் ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. அங்கு 90 சதவீதத்துக்கும் மேல் கட்டிடங்கள் இடிந்தன. 4 லட்சம் பேர் வசித்த அந்நகரில் இருந்த மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்னும் 1.60 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள்.மேலும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பசி, பட்டினியுடன் உயிர் பயத்தில் கட்டிடங்களின் அடித்தளங்களில் தங்கி உள்ளனர். மரியுபோல் நகரில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களை ரஷிய படைகள் தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.இந்தநிலையில் மரியுபோல் நகரில் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் இன்று போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, மரியுபோல் நகரில் இருந்து ஜபோரிஜியாவுக்கு ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மக்கள் வெளியேற மனிதாபிமான பாதை செயல்படுத்தப்படும். இதற்காக மரியுபோலில் இன்று போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது தொடங்கப்பட்ட தாக்குதலின் முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை ரஷிய படைகள் கைப்பற்றியது. செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும் தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் அணு உலையை பாதுகாத்து அதை கைப்பற்றி உள்ளதாக ரஷியா தெரிவித்தது.

ஆனால் அணு உலையை ரஷியா கைப்பற்றியதால் கோடிக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது என்று உக்ரைன் தெரிவித்தது.இந்தநிலையில் செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற தொடங்கி உள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய துருப்புகள் வெளியேறி வருகிறார்கள். அவர்கள் அங்கிருந்து பெலாரசுக்கு செல்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வெளியேறிவிட்டார்கள் என்று என்னால் சொல்ல முடியாது’’ என்றார்.

உக்ரைன் 2-வது பெரிய நகரமான கார்கிவ்வில் ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு எதிராக உக்ரைன் படையினர் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.இந்தநிலையில் கார்கிவ் புறநகரின் முக்கிய சாலையை ரஷிய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 3 நாட்களாக நடந்து வரும் சண்டைக்கு பிறகு கார்கிவ் புறநகரில் உள்ள முக்கிய சாலையை கைப்பற்றி ரஷிய படைகளை பின்வாங்க செய்துள்ளதாகவும் 40 ரஷிய வீரர்களை பிடித்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ‘‘டான்பாஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் புதிய தாக்குதல்களை நடத்த இருப்பதாக, அதை எதிர் கொள்ள உக்ரைன் ராணுவம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.ரஷிய ராணுவத்தின் தொடர் தாக்குதல்களால் உக்ரைன் நாட்டின் பாதி பகுதி வெடி மருந்துகளால் மாசு அடைந்துள்ளது என்று துணை உள்துறை அமைச்சர் யெவ்ஜென் தெரிவித்தார்.உக்ரைனில் போரிட்டு வரும் ரஷிய ராணுவ வீரர்கள், அவர்களது தலைமை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியவில்லை என்றும், சொந்த விமானத்தை தற்செயலாக சுட்டு வீழ்த்தியதாகவும் இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் தெரிவித்தார்.இந்தநிலையில் ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *