பிரதமரை மீண்டும் பதவியில் அமர்த்த சூடான் ராணுவ தலைமை ஒப்புதல்

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது சூடான். அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஹர்டோமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதனால், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சூடான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்தல்லா ஹம்டோக்கை மீண்டும் பதவியில் அமர்த்த, ராணுவத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இத்தகவலை ராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.இருப்பினும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று ஒரு தரப்பு அறிக்கை வெளியிட்டது. ஹம்டோக் ஒரு சுதந்திரமான அமைச்சரவையை வழிநடத்துவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐ.நா. அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் வரைவு ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக அவர்கள் கூறினர். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னர் ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றும் சில அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *