தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படடது. இதில், மாநகராட்சியில் 4 பேர், நகராட்சியில் 18 பேர், பேரூராட்சியில் 196 பேர் என மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் மற்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்காளர்கள் ஒவ்வொருவராக வந்தபடி இருந்தனர். 8 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் எண்ணக்கை அதிகரித்தது. எனவே, 8 மணிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் பதிவாகவில்லை.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சராசரியாக 35.34 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 3 மணி நிலவரப்படி 47.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநகராட்சிகளில் – 39.13%, நகராட்சிகளில் – 53.49%, பேரூராட்சிகளில் – 61.38% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.5 மணியில் இருந்து 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே 5 மணிக்கு பிறகு வாக்களிக்க வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. 5 மணிக்கு முன் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.பண விநியோகம், கள்ள ஓட்டு புகார், வாக்குவாதம், போராட்டம் என பல்வேறு இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதன்பின்னர் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு மையங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றம் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படைகள் நிறுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *