சர்ச்சையால் டுவிட்டை நீக்கினார் எலன் மஸ்க்

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.கட்டாய தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக லாரி டிரைவர்கள் கனடாவில் போராட்டத்தில் குதித்தனர். பாராளுமன்றத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். மேலும் கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலத்தையும் மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். லாரி டிரைவர்கள் போராட்டத்தை ஒடுக்க கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கனடா ஜஸ்டின் ட்ரூடோவை சர்வாதிகாரியான ஹிட்லருடன் ஒப்பிட்டு உலகின் நம்பர்-1 பணக்காரர் எலன் மஸ்க் கருத்து தெரிவித்திருந்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ஹிட்லர் படத்தை வெளியிட்டு அதில், ஹிட்லர் கூறுவது போல் என்னை ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் டுவிட் பதிவை நீக்கினார்.ஏற்கனவே கனடாவில் நடக்கும் லாரி டிரைவர்கள் போராட்டத்துக்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து கனடா அமைச்சர் பிலிப் ஷாம்பெயின் கூறும்போது, ‘எலான் மஸ்க்கின் கருத்துக்கள் வெளிப்படையாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *