google.com, pub-8432884352946851, DIRECT, f08c47fec0942fa0 கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா – கன்னித்தமிழ் உலகச் செய்திகள்

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருவதால் உலக நாடுகள் அனைத்தும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் வடகொரியா இதைப்பற்றி துளியும் கவலை படாமல் தனது எதிரி நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று சோதித்து அதிர வைத்துள்ளது.இந்த ஆண்டில் வடகொரியா நடத்தியுள்ள முதல் ஏவுகணை சோதனை இதுவாகும். எனினும் ஏவுகணை சோதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வடகொரியா இன்னும் வெளியிடவில்லை.தென்கொரிய ராணுவமே இந்த ஏவுகணை சோதனையை அம்பலபடுத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் புதன்கிழமை காலையில் வடகொரியா தனது கிழக்கு கடற்பகுதியை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது என தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனை குறித்த கூடுதல் தகவல்களை பெற தென்கொரியா மற்றும் அமெரிக்க உளவு அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில் வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை தங்களது கடலில் விழுந்ததாக ஜப்பானிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்த கூடுதல் தகவல்களை ஜப்பான் வழங்கவில்லை.

அதேசமயம் வடகொரியாவின் ஏவுகணை சோதனை பிராந்திய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், அதோடு இது சர்வதேச சமூகத்துக்கான பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.அணு ஆயுதங்களின் பயன்பாட்டை வடகொரியா கைவிடுவதற்கு அமெரிக்கா ஒருபுறமும், கொரியா தீபகற்பத்தில் நிலையான அமைதியை ஏற்படுத்த தென்கொரியா ஒருபுறமும் முனைப்பு காட்டி வரும் நிலையில் வடகொரியா இதற்கு சற்றும் வளைந்து கொடுக்காமல் தனது அடாவடி போக்கை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகொரியா தொடர்ச்சியாக பல அதிநவீன ஏவுகணைகளை சோதித்தது. இதில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை படைத்த ஏவுகணைகளும் அடங்கும்.நாட்டின் மீதான பொருளாதார தடைகளில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கையிலும், வடகொரியாவை அணுசக்தி நாடாக ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு எதிரி நாடுகள் மீது அதிக அழுத்தத்தை கொடுப்பதற்கும் இத்தகைய சோதனைகளை வடகொரியா நடத்துவதாக சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர்.

எந்தவித முன்நிபந்தனைகளும் இல்லாமல் எந்த நேரத்திலும் வடகொரியாவுடன் அணு ஆயுத பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது.ஆனால் அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றாமல் இருப்பதாக கூறி, அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்புகளை வடகொரியா நிராகரித்து வருகிறது.

வடகொரியாவில் அண்மையில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழுவின் கூட்டத்தில் உரையாற்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், நாட்டில் நிலவும் உணவு பற்றாக்குறையை சமாளிப்பது மற்றும் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கே இந்த ஆண்டு தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *