கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலமானார். இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 46.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமாருடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘புனித் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான நடிகரை விதி நம்மிடமிருந்து பறித்துவிட்டது. புனித் ராஜ்குமார் திறமைக்காகவும், ஆளுமைக்காகவும் வருங்கால தலைமுறையினரால் நினைவு கூறப்படுவார்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். அதில், ‘மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. இவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு.திரை நட்சத்திரமாக இருந்தபோதிலும் ஒரு தாழ்மையான மனிதராகவே இருந்தார். தலைவர் கலைஞரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறுவதற்காக எங்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற புனித் அவர்களின் அன்பான செயல் இன்னும் என் இதயத்தில் உள்ளது.

கன்னட திரையுலகம் மிகச்சிறந்த மனிதரை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில்,நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *