சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மாலை முதல் கனமழை பெய்கிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்ஆர்சி நகரில் 20 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. நுங்கம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. கனமழையால் பிரதான சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால், சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, அண்ணா சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நேரம் செல்லச் செல்ல சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட பலர், 4 மணி நேரமாகியும் வீடுகளுக்கு சென்றடைய முடியாத நிலையில் உள்ளனர். அங்குலம் அங்குலமாக வாகனங்கள் நகர்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். பலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு, போக்குவரத்து சீரடையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால், பலர் மெட்ரோ ரெயில்களில் பயணிக்கத் தொடங்கினர். இதனால் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் மெட்ரோ ரெயில் சேவை 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.