ஒமைக்ரான் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒமைக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிரமாக உள்ளது. இதைத் தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் பலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி வருகிறது.கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.
கடந்த டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது.இதுபற்றி நியூயார்க் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது அமெரிக்காவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். அமெரிக்காவில் 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தொற்றில் இருந்து குழந்தைகளை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.