ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 160 பேர் பலி

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏமனின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மரிப் மற்றும் ஷப்வா நகரங்களில் பல மாவட்டங்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனால் அந்த நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இந்நிலையில், மரிப் நகரின் தெற்கே அபியா பகுதியில் தொடர்ந்து நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 160 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், சண்டையின்போது 11 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது. மரிப் நகருக்கான போரில் திங்கள்கிழமை முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 700-க்கும் அதிகமான ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் சவுதி கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *