இலங்கை சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் எரித்துக் கொலை பாகிஸ்தானில் இதுவரை 100 பேர் கைது

இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள தீவிர இஸ்லாமிய கட்சியின், குரான் வாசகம் பொறிக்கப்பட்ட போஸ்டரை கிழித்து குப்பை தொட்டியில் வீசியதாக வதந்தி பரவியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு, பிரியந்தா குமாராவை தொழிற்சாலையில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். பின்னர் அவர்கள் அவரை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர்.

இதில் வலி தாங்க முடியாமல் பிரியந்தா குமாரா அலறினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடவில்லை. கண்மூடித்தனமாக சுற்றி வளைத்து தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் அவரை உயிரோடு தீ வைத்து எரித்தனர். இதில் பிரியந்தா குமாரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.பின்னர் உயிரோடு எரிக்கப்பட்டவர் முன்பு நின்று அந்த வெறியாட்ட கும்பல் செல்பி எடுத்து மிக கொடூராக நடந்து கொண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வன்முறை கும்பலை விரட்டி அடித்தனர்.இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் மாகாண முதல் -மந்திரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தானுக்கு இது அவமானகரமான நாள் என்று டுவிட்டரில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதேபோல் மனித உரிமை ஆணையம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 100 பேரை கைது செய்துள்ளனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *