இசைக் குயில் என்று புகழப்பெற்ற இந்தியாவின் பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார் . அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 8-ந்தேதி அவர் தென் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தொற்று பாதிப்பு லேசாகவே காணப்பட்டது. ஆனாலும் வயது மூப்பின் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதால் கடந்த 29-ந் தேதி அவர் வெண்டிலேட்டரில் இருந்து மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். இந்தநிலையில் நேற்று மீண்டும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்தார். ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.
இதற்கிடையே, லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இரு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதி ஊர்வலம் அவரது இல்லமான பிரபுகஞ்சில் இருந்து மாலையில் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று தங்களது அஞ்சலியை செலுத்தினர்.