உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷியாவை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும் போது, ‘உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.மேலும் படையெடுப்பை ரஷியா அடுத்த வாரம் தொடங்கும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் முடிவு செய்துவிட்டார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது ரஷிய படைகள் உக்ரைனை வரும் நாட்களில் தாக்க திட்டமிட்டுள்ளன என்று நம்புவதற்கு எங்களுக்கு காரணங்கள் உள்ளது. உக்ரைன் மீது படையெடுக்க ரஷிய அதிபர் புதின் முடிவு செய்துவிட்டார்.அமெரிக்க உளவுத்துறையின் கணிப்புபடி இந்த தாக்குதலில் கீவ் நகரம் குறி வைக்கப்படும். ரஷிய படை வீரர்கள் சுமார் 1.90 லட்சம் பேர் உக்ரைன் எல்லையிலும் அதற்கு அருகிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் ரஷிய படைகள் குவிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா கணித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுப்பதற்காக ரஷியா தவறான தகவல்களை அளித்துள்ளது. ரஷிய மக்களுக்கு தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் அதிபர் முனிச்சில் நடக்கும் பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்பது அவரது விருப்பம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவது புத்தி சாலித்தனமாக இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.