லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல்

இசைக் குயில் என்று புகழப்பெற்ற இந்தியாவின் பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார் . அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 8-ந்தேதி அவர் தென் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொற்று பாதிப்பு லேசாகவே காணப்பட்டது. ஆனாலும் வயது மூப்பின் காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்பட்டதால் கடந்த 29-ந் தேதி அவர் வெண்டிலேட்டரில் இருந்து மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினார்கள். இந்தநிலையில் நேற்று மீண்டும் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தநிலையில் இன்று காலை லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்தார். ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது  “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தைச் செலுத்தியது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள். இந்தியர்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *