மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகியை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைத்தது.ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல் மற்றும் ஊழல் என ஆங் சான் சூகி மீது 12-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன.தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆங் சான் சூகி திட்டவட்டமாக மறுத்தார். ஆனாலும் மியான்மர் கோர்ட்டு அவருக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது.

இதில் ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு கடந்த டிசம்பர் மாதம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம், வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் பின்னர் அந்த தண்டனை 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.இந்த நிலையில் தற்போது ஊழல் வழக்கு ஒன்றில் ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி, தனது சக அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தான் நேற்று அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.இதோடு சேர்த்து மொத்தம் 11 ஆண்டுகள் ஆங் சான் சூகி சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார்.

இதுதவிர இன்னும் 10-க்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆங் சான் சூகி மீது விசாரணை நடத்தப்படவுள்ளது. மியான்மரின் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டுக்கும் அதிகப்பட்சமாக 15 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும்.அப்படி பார்க்கிறபோது ஆங் சான் சூகி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் தற்போது 76 வயதாகும் அவருக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *